சென்னை: தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், கடந்த 21-ம் தேதி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், தினமும் எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று கையெழுத்திட வந்த கஸ்தூரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆக்ரோஷத்தை குறைத்துவிட்டு, அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பது எனது முடிவாக உள்ளது. குறிப்பாக, பக்குவமாக உணர்ச்சி வசப்படாமல் பேசுவது எப்படி என்பதை, கற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 4 ஆண்டுகளாக ஹைதராபாத்தில்தான் வசித்து வருகிறேன்.
2 படம், ஒரு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறேன். படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. எனது மகனும் அங்கேதான் படித்து வருகிறார். மகனின் படிப்பும் தடைபட்டு இருப்பதால், போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடும் நடைமுறையில் தளர்வு கோரி உள்ளேன். இதுதொடர்பான மனு, வரும், 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனக்கு விருப்பமான நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.