சேலம்: மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில், முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரை மாவட்டம் நாய்க்கன்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு, திமுக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், தற்போது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தவுடன், அதை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி முதல்வர் ஸ்டாலின் நாடகமாடுகிறார்.
வணிகக் கட்டிடங்களுக்கான வாடகைக்கு 18 சதவீதம்ஜிஎஸ்டி வரி விதிப்பால், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரியைஉயர்த்தியதுடன், அதிமுக மீது பழிபோடுகிறார்கள். சொத்து வரி குறைக்கப்படும் என தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதி என்னவானது? முல்லை பெரியாறு பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கூட்டணிக்கு வருபவர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு திமுகவினர் கொடுத்ததைத்தான், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கலவரம் நடப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக கூட்டத்தில்தான் கலவரம் நடந்தது. அதை மறந்துவிட்டு அவர் பேசுகிறார். திமுக எம்.பி. திருச்சி சிவா வீட்டிலேயே அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதுபோல கலவரம் செய்வது திமுகவினர்தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாததால், குற்றச்செயல்களைத் தடுக்க முடியவில்லை. இனியாவது தமிழகத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.
அதிமுக யாருக்கும் அடிமை கிடையாது. சுதந்திரமாக செயல்படும் கட்சி. வாரிசு அரசியலுக்கும் இங்கு இடமில்லை. உழைப்பவர்கள் யாராக இருந்தாலும், உரிய பதவிக்கு வரலாம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.