உருவானது ஃபெஞ்சல் புயல்! - சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில், இன்று (நவ.29) பகல் 2.30 மணிக்கு ஃபெஞ்சல் புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ‘ஃபெஞ்சல்’ புயலாக வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே சனிக்கிழமை மதியம் புயலாக கடக்கக் கூடும்.
அந்தச் சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. இது, சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த பெயராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எங்கெல்லாம் ரெட் அலர்ட்? - ஃபெஞ்சல் புயல் காரணமாக, சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் ரெட் அலர்ட் எனப்படும் அதி கன மழை பெய்யக்கூடும்.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி , புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எதிரொலி: தரைக்காற்று எச்சரிக்கை: சனிக்கிழமை வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புயல் மற்றும் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஏற்கெனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
திண்டுக்கல், புதுக்கோட்டையில் அமலாக்க துறை சோதனை: திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என். சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேரின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்: மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்துமாறும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு: ஷிண்டே - மகாராஷ்டிராவில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மகாயுதி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், புதிய முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்டோர் டெல்லியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, "சந்திப்பு நன்றாகவும் நேர்மறையாகவும் இருந்தது. இதுவே முதல் சந்திப்பு. அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவுடன் ஆலோசித்தோம். மகாயுதியின் இன்னொரு கூட்டம் இருக்கும். இந்தக் கூட்டத்தில் முதல்வர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்த சந்திப்பு மும்பையில் நடைபெறும்" என்று தெரிவித்தார். மேலும் அவர், இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்'' என்றும் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் அதிரடி சட்டம்! - ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சமூகப் பொறுப்பு சமூக வலைதள நிறுவனங்களுக்கு உள்ளது என அந்த நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
பல்லடம் அருகே தாய், தந்தை, மகன் படுகொலை: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான அவிநாசிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த விழாவுக்காக, மகன் செந்தில்குமார் வியாழக்கிழமை செம்மலைகவுண்டம்பாளையத்துக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை தாய், தந்தையுடன் வீட்டுக்குள் இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தெய்வசிகாமணியை கத்தியால் குத்தி, இரும்புராடால் அடித்து கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மூன்று பேரின் சடலங்களும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பல்லடம் சம்பவம்: கட்சித் தலைவர்கள் கண்டனம் - பல்லடம் சம்பவத்தை முன்வைத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். திமுக அரசு தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காவல் துறைக்குப் பொறுப்பான முதல்வரோ இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார் என விமர்சித்துள்ளார்.
‘கட்டண உயர்வுக்கு பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?’ - அன்புமணி: “800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?” என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.