திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் திமுகவைச் சேர்ந்த நகராட்சி தலைவர் மோகனவேல் மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டி, அக்கட்சியைச் சேர்ந்த 8 கவுன்சிலர்கள் இன்று (நவம்பர் 29ம் தேதி) ராஜினாமா செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு (திருவத்திபுரம்) நகராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த மோகனவேல். இவர், உள்ளூர் அமைச்சர் எ.வ.வேலு பரிந்துரையின் பேரில், கட்சி தலைமை அறிவித்த, நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் வழக்கறிஞர் விஸ்வநாதனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்த நகர திமுக செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, தோல்வியை தழுவிய வழக்கறிஞர் விஸ்வநாதனிடம் கொடுக்கப்பட்டது.
இதன் பின்னணியில், செய்யாறு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான தரணிவேந்தன் இருந்ததாக தகவல் வெளியானது. பதவி பறிப்புக்கு பிறகு செய்யாறு திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்தது. திமுக தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதால், நகராட்சி தலைவர் மோகனவேல், சர்வ சுதந்திரமாக செயல்பட்டார்.
இதனால், தனது ஆதரவு கவுன்சிலர்கள் மூலமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி, நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம், செய்யாறு நகராட்சி கூட்டத்தில் அடிக்கடி எதிரொலித்தது. தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கருத்து தெரிவிப்பது வாடிக்கையானது.
திமுக உட்கட்சி பூசல் இன்று(நவம்பர் 29-ம் தேதி) நடைபெற்ற செய்யாறு நகராட்சி கூட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. நகராட்சி துணைத் தலைவர் பேபி ராணி, ரமேஷ், குல்சார், ராஜலட்சுமி, மகாலட்சுமி, விஜயலட்சுமி, சரஸ்வதி, கார்த்திகேயன் ஆகிய 8 திமுக கவுன்சிலர்களும், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக, நகராட்சித் தலைவர் மோகனவேலிடம் கடிதம் வழங்கினர்.
அப்போது அவர்கள், “கவுன்சிலர்களின் கருத்துக்கு தலைவர் மதிப்பளிப்பது இல்லை. தன்னிச்சையாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவில்லை” என்பதால், பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர். செய்யாறு நகராட்சியில் 27 இடங்கள் இருக்கிறது. இதில் 18 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றிருந்தது.
மேலும், சுயேட்சையாக வெற்றி பெற்ற 3 பேரும், திமுக ஆதரவு நிலையை எடுத்துள்ளனர். இதன் மூலம் செய்யாறு நகராட்சியில் திமுக கூட்டணிக்கு 22 வார்டுகளும், அதிமுகவுக்கு 3 வார்டுகளும், பாமகவுக்கு 2 வார்டுகளும் உள்ளன. 8 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளதால் பெரியளவில் மாற்றம் ஏதும் இருக்காது என்ற கருத்து நிலவுகிறது. 8 கவுன்சிலர்களின் ராஜினாமா ஏற்கபடும் பட்சத்தில், மேற்கண்ட 8 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.