கல்விக் கடனை அடைத்தும் வீட்டு பத்திரம் தராத வங்கி; குடும்பத்தினருடன் போராட்டம் - கடலூரில் பரபரப்பு


கடலூர்: கடலூர் அருகே உள்ள வி‌.காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, எழிலரசி தம்பதியினர். இவர்களது மகன் முருகன். இவர் மருத்துவக் கல்வி படிப்பதற்கு 2015ல் கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள யூனியன் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.15 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடனுக்காக சுந்தரமூர்த்தி தனது வீட்டு பத்திரத்தை வங்கிக்கு அடமானமாக பதிவு செய்து கொடுத்திருந்தார். இந்த நிலையில் இக்கடனுக்கான வட்டியும், அசலையும் சேர்த்து ரூ.21.5 லட்சத்தை கடந்த 2021ம் ஆண்டு வங்கியில் கட்டி கடனை முடித்துள்ளார்.

இந்த நிலையில் வங்கி நிர்வாகம் பத்திர பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்து அடமானத்தை ரத்து செய்துவிட்டனர். ஆனால் வங்கியில் வைத்திருந்த அவர்களது, வீட்டிற்கான ஒரிஜினல் மூல பத்திரத்தை தரவில்லை. கடன் கட்டி முடித்து பைசல் செய்யப்பட்ட பிறகும் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களின் வீட்டு பத்திரத்தை தராமல் வங்கி நிர்வாகம் அலைக்கழித்துள்ளது. இது குறித்து காவல் நிலையம், மாவட்ட காவல், கண்காணிப்பாளர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, ஆர்பிஐ ஆகியவற்றிற்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில், பத்திரம் தொலைந்து விட்டதாக வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வங்கியில் இரண்டு மேலாளர்கள் மாறிய நிலையிலும் பத்திரம் கொடுக்காததால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தங்களுடைய வீட்டு பத்திரத்தை மீட்டுதர வலியுறுத்தி இன்று (நவ.29) காலை 10 மணி அவர்கள், குடும்பத்துடன் வங்கி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேரம் கடந்தும் வங்கி திறக்கப்படாததால் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு முன் திரண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தாரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வங்கி திறந்த பிறகு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து வங்கி திறக்கப்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து வங்கியின் ரீஜனல் மேனேஜர் வரவழைக்கப்பட்டு புதிய பத்திரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உறுதி அளித்து அனுப்பிவைத்தனர்.

x