கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் - விரைந்தது பேரிடர் மீட்புப் படை!


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது நவ.30ம் தேதி பிற்பகல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் கனமழையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை எடுக்கும்படி நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நானும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளேன். இந்நிலையில் நவ.29ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீ்ட்பு உபகரணங்களை பொருத்தவரை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் 1193 ஜெசிபி இயந்திரங்கள், 806 படகுகள், 977 ஜெனரேட்டர்கள், 1786 மர அறுப்பான்கள், 2439 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், முதல்வர் உத்தரவின்படி ஏற்கெனவே, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்கள், விழுப்புரத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற 4153 படகுகள் கரை திரும்பியுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர, தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்" என்று கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

இந்த ஆய்வின் போது, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மோலாண்மை இயக்குனர் மோகனசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

x