உருவானது ஃபென்ஜல் புயல் - நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு!


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில், இன்று பகல் 2.30 மணிக்கு ஃபென்ஜல் புயல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 'ஃபென்ஜல்' புயலாக இன்று பகல் 2.30 மணிக்கு வலுப்பெற்றது. திரிகோணமலைக்கு வட-வடகிழக்கே சுமார் 310 கி.மீ., தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 260 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக புதுவை கடற்கரையை, காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே நாளை மதியம் புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு சவுதி அரேபியா நாடு ஃபென்ஜல் என பெயரிடப்பட்டுள்ளது.

ஃபென்ஜல் புயல் காரணமாக, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் டிச.5-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாக நாளை இந்த 7 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி , புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்; நாகை, காரைக்கால் துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும்; பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

x