கடலூர்: மீன் பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்ததால், நடுக்கடலில் சிக்கி தவித்த கடலூர் மீனவர்கள் உட்பட 10 பேர், இந்திய கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாகவே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீன்வளத் துறையும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீன்வளத் துறையின் எச்சரிக்கையையும் மீறி தைக்கால்தோனித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள், தாங்கள் ஏற்கெனவே கட்டிய வலையில் இருந்து மீன்களை எடுப்பதற்காக, இயந்திரம் பொருத்தப்பட்ட 2 நாட்டுப்படகுகளில் கடந்த 27-ம் தேதி அதிகாலை கடலுக்கு சென்றனர். கடல் மிகவும் சீற்றத்துடன் இருந்ததால், இவர்களது ஒரு படகு கவிழ்ந்து உடைந்தது. மணிக்கண்ணன் (35), சாமிதுரை (61), மணிமாறன் (30), தினேஷ் (29), சற்குணன் (23) ஆகிய 5 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிறிது நேரத்தில், 5 பேரும் சுதாரித்து தமிழ்வாணன் (37) என்பவரது படகில் ஏறிக்கொண்டனர்.
ஆனால், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், 6 பேரும் ஒரே படகில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடல் நடுவே உள்ள சிறிய அளவிலான தனியார் கப்பல் இறங்குதளத்தில் 6 பேரும் இறங்கினர். இது கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான இறங்குதளமாகும்.
இதுகுறித்து மீன்வளத் துறைக்கு தகவல் கொடுத்த அவர்கள், தங்களை மீட்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும், கடல் தொடர்ந்து கொந்தளிப்புடன் இருந்ததால், படகு மூலம் அவர்களை மீட்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், கடலில் மீனவர்கள் சிக்கியுள்ளது குறித்து இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு விரைந்து சென்றது. கப்பல் இறங்குதளத்தில் இருந்த 6 மீனவர்களும் நேற்று மாலை பத்திரமாக மீட்கப்பட்டு கடலூர் சித்திரைப்பேடை கடற்கரை பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோல, அந்த இறங்குதளத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், வருவாய் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். தங்களை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல் படையினருக்கும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கும் மீனவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.