100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா: குடியரசு தலைவர் பெருமிதம்


குன்னூர் வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு நேற்று வருகை தந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு நினைவு பரிசு வழங்கினார் கல்லூரி முதல்வர் வீரேந்திர வாட்ஸ்.

குன்னூர்: இந்தியா 100 நாடு​களுக்கு பாது​காப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்​கிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே​யுள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி​யில் அதிகாரி​களு​டனான கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்​ப​தற்காக உதகையி​லிருந்து நேற்று காலை கார் மூலம் வெலிங்டன் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள போர் நினை​வுச் சின்னத்​தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்​தினார். மேலும், உயிர்​நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்​தா​ருக்கு நலத் திட்​டங்களை வழங்​கினார்.

முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி கூட்ட அரங்​கில் கலந்​துரை​யாடல் நிகழ்ச்சி நடந்​தது. கல்லூரி முதல்வர் வீரேந்திர வாட்ஸ் வரவேற்​றார். தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்​யநாதன் முன்னிலை வகித்​தார். கல்லூரி​யில் பயிற்சி பெற்று வரும் அதிகாரி​கள், தங்களது அனுபவங்​களைப் பகிர்ந்து கொண்​டனர். சிறப்பு விருந்​தின​ராகப் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பயிற்சி அதிகாரிகள் மத்தி​யில் பேசி​ய​தாவது: நாட்​டிலேயே முதன்​மையான இந்த பயிற்சிக் கல்லூரி​யில் 26 நாடு​களைச் சேர்ந்த, 38 அதிகாரிகள் பயிற்சி பெறுகின்​றனர். பெண் அதிகாரி​களும் பயிற்சி பெறுவது இன்றியமை​யாதது. வரும் காலங்​களில் அதிக அளவில் பெண்கள் இதுபோன்ற பாது​காப்பு படை பயிற்சி​களில் இடம்பெறு​வார்கள் என எதிர்​பார்க்​கிறேன்.

பெண்கள் நாட்டுக்காக சேவைபுரிவது பாராட்டுக்​குரியது. அனைத்து துறை​களி​லும் மகளிர் சாதனை படைத்து வருகின்​றனர். உலகின் உயர்ந்த போர்க்​களமான சியாச்​சினில் பணிபுரிந்து வரும் பெண் அதிகாரிகளை சந்தித்​துள்ளேன். முப்​படைகளில் முக்​கியப் பொறுப்பு​களில் பெண்கள் பணிபுரிந்து வருகின்​றனர். குறிப்​பாக, இந்திய கடற்​படை​யில் முதன்​முறையாக ஒரு பெண் அதிகாரி கமாண்​டிங் அதிகாரியாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இம்மாத தொடக்​கத்​தில் கோவா​வில் ஐஎன்எஸ் விக்​ராந்த் கப்பலில் பணிபுரி​யும் பெண் அக்னி வீரர்கள் மற்றும் மாலுமிகளை சந்தித்​தேன். வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, இந்திய மற்றும் நட்பு நாடு​களின் பாது​காப்புத் துறை​யில் திறமையான அதிகாரிகளை உருவாக்கு​வ​தில் பெரும் பங்கு வகித்து வருகிறது. 70 ஆண்டு​களாக செயல்​பட்டு வரும் இந்தக் கல்லூரி​யில், நவீனத் தொழில்​நுட்​பம், டிஜிட்டல் மயத்​துடன் சிறப்பான உட்கட்​டமைப்புடன் பயிற்சி அளிக்கப்​பட்டுவருவது மகிழ்ச்சி அளிக்​கிறது.

சர்வதேச அளவில் இந்த பயிற்சி மையம் முன்னோடி​யாகத் திகழ்​கிறது. இங்கு பயிற்சி பெற்ற பல அதிகாரி​கள், தங்கள் நாடு​களில் முக்​கியப் பதவி​களில் பணியாற்றி வருகின்​றனர். இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்​சியை உலக நாடுகள் அங்கீகரிக்​கின்றன. இந்தியா, எதிர்கால சவால்களை சமாளிக்​கும் வகையில், தனித்து​வத்​துட​னும், சுயசார்​புடனும் முன்னேறி வருகிறது. நமது பாது​காப்புத்​துறை தளவாட உற்பத்​தி​யில் தன்னிறைவு பெற்று, நம்பகத்​தன்​மை​யுடன் ஏற்றுமதி செய்து வருகிறது. பாது​காப்புத் துறை​யில் ஹெச்​ஏஎல், டிஆர்டிஓ நிறு​வனங்கள் தடம் பதித்து வருகின்றன. தற்போது 100-க்​கும் அதிகமான நாடு​களுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்​யப்​படு​கின்றன. ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்​துள்ளது. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டமே முக்​கியக் காரணம்.

நாம் எப்போதும் புதிய சவால்களை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்​டும். உள்நாட்டு பாது​காப்பு மட்டுமின்றி, சைபர் குற்​றங்கள் மற்றும் தீவிர​வாதத்​தை​யும் சமாளிக்க வேண்​டி​யுள்​ளது. மேலும், காலநிலை மாற்​றத்​துக்​கும் தயாராக இருக்க வேண்​டும். எனவே, ஆழ்ந்த ஆராய்ச்​சி​யுடன் நவீனத் தொழில்​நுட்பங்களை உரு​வாக்க வேண்​டும். இந்தியா, உல​கத்தை ஒரு குடும்பமாக பா​வித்து வரு​வ​தால், சர்​வதேச அள​வில் அமைதி மற்றும் பாது​காப்பை வலி​யுறுத்தி வரு​கிறது. இவ்​வாறு அவர்​ பேசினார்​.

x