கோவை: சமூகநீதி பேசும் முதல்வர், பிறப்பின் அடிப்படையில் முக்கியத்துவம் கிடையாது என்று சொல்லக்கூடிய மாநிலத்தின் முதல்வர், ஏன் தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கினார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு 68 டாடாபாத் இரண்டாவது வீதியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா வியாழக்கிழமை (நவ.28) மாலை நடந்தது.கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “விஸ்வகர்மா திட்டம், சமூக நீதிக்கு எதிராக, சாதிவாரியாக அமல்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று உண்மைக்கு சற்றும் பொருத்தம் இல்லாத தகவலை மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். சமூகநீதி பாதிக்கப்படும் என்கின்ற ரீதியில் பொய் சொல்லி, இதன் வாயிலாக தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞர்களுடைய வாழ்க்கையை முதல்வர் முடக்கப் பார்க்கிறார்.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கூட விஸ்வகர்மா திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பலன் பெற்றுக் கொண்டுள்ளனர். விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படுவதை திமுக அரசு விரும்பவில்லை இதுதான் உண்மை. இந்த உண்மைக்கு மாறாக, சமூக நீதிக்கு பாதிப்பு வருகிறது, பிறப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார்கள்.
சமூக நீதி பேசும் முதல்வர், பிறப்பின் அடிப்படையில் முக்கியத்துவம் கிடையாது என்று சொல்லக்கூடிய மாநிலத்தின் முதல்வர், ஏன் தனது மகனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கினார். யாருடைய வழிபாட்டு தெய்வமாக இருந்தாலும், எந்த ஒரு விதத்திலும், எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தாழ்வு செய்யும் வகையில் நடந்து கொள்வது சட்ட ரீதியாக தவறானது. திமுக அரசை போற்றி பேசுபவர்களாக இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை இருக்காது.
காவி என்பதை சீமான் தத்துவத்தோடு இணைத்து பேசுகிறார். காவி என்பது பாஜக-வுக்கு சொந்தமான நிறம் கிடையாது. அது நாட்டினுடைய பாரம்பரியம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் விரைவில் உடல் நலம் பெற பிராத்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.