பொதுநல மனுக்களுடன் ஆதாரம் இல்லாவிட்டால் அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை


மதுரை: பொதுநல மனுக்களுடன் ஆதாரங்களை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியகிளாட் அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

பின்னர் நீதிபதிகள், பொது நல மனுக்களைத் தாக்கல் செய்யும் போது அதில் மனுதாரர்கள் தெரிவித்துள்ள குற்றசாட்டுகளுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக இலவச வீட்டு மனை பட்டா பயனாளிகள் பட்டியலில் தகுதி இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என குற்றம்சாட்டினால், தகுதியற்றவர்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தால், அரசு நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்? என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மனுக்கள் கடும் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டனர்.

x