தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத அலகட்டு மலைகிராமத்தில் பாம்பு கடித்த சிறுமியை தூளி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது அலகட்டு மலை. சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் இந்த மலையில் வசிக்கின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா - சிவலிங்கி தம்பதியரின் மகள் கஸ்தூரி (13). இவர் இன்று (28ம் தேதி) வீட்டருகே கீரை பறித்துள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் அலறிய சிறுமியை மலை கிராம மக்கள் தூளி கட்டி சிகிச்சைக்கு தூக்கிச் சென்றனர்.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அடர் வனப்பகுதி வழியாக நடந்து சென்று மலையடிவாரமான சீங்காடு பகுதியில் இருந்து ஆட்டோவில் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது சிறுமி உயிரிழந்திருந்தது தெரியவந்தது. எனவே, சிறுமியின் உடலை மீண்டும் மலை கிராமத்துக்கே தூளியில் தூக்கிச் சென்றனர். சிறுமியின் உயிரிழப்பு அலகட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அலகட்டு மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு இங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். பாம்புக் கடி போன்ற அவசர சூழல்களில் விரைவாக சிகிச்சைக்கு சென்று உயிரிழப்புகளை தடுக்க அலகட்டு மலை கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். இனியும் எங்கள் கிராமத்தில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அலகட்டு கிராம மக்கள் கூறியுள்ளனர்.