காஞ்சிபுரம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், சங்கர மடம் ஆகிய இடங்களில் இன்று (நவம்பர் 28ம் தேதி) வழிபாடு நடத்தினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் முதலில் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற அவரை ஆலய நிர்வாகிகள் மற்றும் அர்சகர்கள் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் கோயிலில் இருந்து வழிபாடு நடத்திய அவர் இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு வந்தார்.
அங்கு சந்திர சேகரேந்திர சரஸ்வதி அதிஷ்டானம் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி அதிஷ்டானத்தில் வழிபாடு செய்தார். அங்கு அவருக்கு மடத்தின் சார்பில் பூஜைக்கு பின் பிரசாதங்கள் வழங்கினர். பின்னர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களை வலம் வந்து அமைச்சர் வழிபாடு செய்தார்.
இந்த நிகழ்சியில் பாஜக மாவட்டத் தலைவர் பாபு உடன் இருந்தார். பாஜக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். சங்கர மடத்தின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இவர் வருகையையொட்டி சங்கர மடம், காமாட்சி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.