சென்னை: கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் அரசின் திட்டங்களால் தமிழகத்தில் பால் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், தமிழக பால்வளத் துறை சிறப்பாக செயலாற்றி வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு, பால் உற்பத்தியில் ஆண்டுதோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி, 2017 முதல் 2020 வரை 7.742 மில்லியன் டன், 8.362 மி.டன், 8.759 மி.டன் என்று இருந்த தமிழக பால் உற்பத்தி 2021 முதல் 2023 வரை 9.790 மி.டன், 10.107 மி.டன், 10.317 மி.டன் என உயர்ந்துள்ளது.
சராசரியாக தனிநபருக்கு கிடைக்கும் தினசரி பால் அளவு 2019-20-ம் ஆண்டில் 316 கிராமாக இருந்தது. அது 2022-23-ம் ஆண்டில் 369 கிராமாக உயர்ந்துள்ளது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது.
ஊக்கத்தொகை, போனஸ்: 2022-23-ம் ஆண்டு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.27.60 லட்சமும், இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.12.58 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 2023-24-ம் ஆண்டு ஒன்றியங்களின் பணியாளர்களுக்கு ரூ.25.85 லட்சமும், இணையத்தின் பணியாளர்களுக்கு ரூ.11.61 லட்சமும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டில் 1.39 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.19.51 கோடி போனஸ், ரூ.34.32 கோடி பங்கு ஈவுத்தொகை, ரூ.38.63 லட்சம் ஆதரவு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களின் 5 லட்சம் கறவை மாடுகளுக்கு 85 சதவீத மானியத்தில் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்வதால்தான் இந்த வளர்ச்சி சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.