நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு பரஸ்பர விவாகரத்து: சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐஸ்வர்யாவும், திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளையமகனும், நடிகருமான தனுஷூம் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவ.18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவி்த்தனர். இருவருக்குமிடையே சமரசம் ஏற்படுத்த குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து பரஸ்பரம் விவாகரத்து வழங்க வேண்டும், எனக் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி முன்பாக நடந்து வந்தது. முதலில் 6 மாத காலம் இருவருக்கும் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்பிறகும் இருவரும் சேர்ந்து வாழ விருப்பமின்றி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால், இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி நீதிபதி சுபாதேவி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

x