சாதி பாகுபாடின்றி பொதுவாக பணியாற்றுங்கள்: புதிய காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை


காவல் துறையினருக்கு சமூகநீதிப் பார்வை, மதச்சார்பின்மை முக்கியம். சாதி பாகுபாடு பார்க்க கூடாது, பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என்று புதிதாக தேர்வான காவலர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம் மூலம் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3,359 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதன்படி 2-ம் நிலை காவலர் பணிக்கு 1,819 ஆண்கள், 780 பெண்கள் என 2,599 பேரும் சிறைத்துறை காவலர் பணிக்கு 3 பெண்கள் உட்பட 86 பேரும் தீயணைப்பாளர் பணிக்கு 674 பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்க, அதன்பின் உயர் அதிகாரிகளிடம் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 பேர் ஆணைகளை பெற்றனர். இவர்கள் தவிர்த்த மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகள் ஆணைகளை வழங்கினர்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் அரசை பொறுத்தவரை, காவலர்களை போற்றும் அரசாக, காவல் துறையினருக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி பக்கபலமாக இருக்கும் அரசாக அமைந்துள்ளது. அதனால்தான், உலக அளவிலேயே ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக தமிழக காவல்துறை விளங்குகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் காவலர்கள் முதல் டிஎஸ்பிக்கள் வரை 17,435 பேரை காவல் துறையிலும், 1,252 பேர் தீயணைப்புத் துறையிலும், 366 பேர் சிறைத் துறையிலும் புதிதாக நியமித்துள்ளோம். 2-ம் நிலைக் காவலர் முதல் தலைமைக் காவலர் வரை வாரத்தில் ஒரு நாளும், உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருநாளும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இடர் படி ரூ.1,000 ஆக உயர்வு, காப்பீட்டுத் தொகை இரண்டு மடங்காக உயர்வு, மனஅழுத்தம் போக்க 'மகிழ்ச்சி' திட்டம், பெண் காவலர்களுக்கு 'ஆனந்தம்' என்கின்ற திட்டம் என இந்த அரசின் காலம்தான், தமிழக காவல்துறையின் பொற்காலமாகும்.

கஷ்டப்பட்டு வந்துள்ள நீங்கள் மக்களின் கஷ்டங்களை நீக்க பாடுபட வேண்டும். நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்கள், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். இவற்றை எதிர்கொள்ள வேண்டும். சமூக குற்றங்களை களைவதுடன், சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காப்பதும் முக்கியம்.

சமூகநீதிப் பார்வை, மதச்சார்பின்மை முக்கியம். சாதிப் பாகுபாடு பார்க்க கூடாது. பொதுவான நிலையில் பணியாற்ற வேண்டும். பிரச்சினை என்று புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும். ஒரு மாநிலம் பாதுகாப்பாக இருந்தால்தான் தொழிற்சாலைகள் வரும். வேலைவாய்ப்பு பெருகும். அதன்மூலம் மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்த வேண்டும். காவல் துறை உயர் அதிகாரிகள், கடைநிலை காவலர்கள் வரை நட்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பணியை கவனிப்பதுடன், உங்கள் உடல் நலனையும், உள்ள நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்துக்காக நேரம் செலவிடுங்கள். தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் என்னிடம் விருது வாங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.ரகுபதி, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

x