சென்னை: தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். தந்தை ஸ்டாலினிடமும் தாயார் துர்கா ஸ்டாலினிடமும் வாழ்த்துகளை பெற்றார். அப்போது ஸ்டாலின் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது, நினைவிட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடமும் வாழ்த்து பெற்றார். பின்னர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் க.அன்பழகன் இல்லத்துக்குச் சென்று அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வுகளில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், தயாநிதிமாறன் எம்.பி.,சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கோபாலபுரம் கருணாநிதி இல்லத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அதன்பின், அத்தை செல்வியையும் சிஐடி நகர் இல்லத்தில் ராசாத்தி அம்மாளையும் சந்தித்து ஆசி பெற்றார். முன்னதாக, துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது இல்லத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர் அன்பில் மகேஸ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சிஐடி நகரில் இருந்து முகாம் அலுவலகம் வந்த உதயநிதிக்கு, இளைஞரணி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தா.மோ.அன்பரசன், கே.ஆர்.பெரியகருப்பன், கீதாஜீவன், செந்தில் பாலாஜி, சிவசங்கர், மதிவேந்தன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சாத்தூர் ராமச்சந்திரன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, ஆர்.காந்தி, சா.மு.நாசர், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர்.
மேலும் செங்கை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மதுசூதனன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வந்தேமாதரம், ஒன்றியக் குழு துணைத்தலைவர் உமாமகேஸ்வரி வந்தே மாதரம், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் படப்பை ஆ.மனோகரன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் தவிர ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், இளைஞரணியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் விசிக தலைவர் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ஆகியோரும் வாழ்த்து கூறினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன், ‘மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். மேலும் பிறந்தநாள் நிகழ்வின் ஒரு பகுதியாக, திருநங்கையருக்கு தொழிற்பயிற்சி அளிக்கும் நிகழ்வை உதயநிதி தொடங்கி வைத்து, பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.