குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 4 நாள் பயணமாக உதகை வந்தடைந்தார்.
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுடெல்லியில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்த குடியரசுத் தலைவரை, விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் முப்படை உயரதிகாரிகள் வரவேற்றனர்.
அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. ஆனால், பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, குடியரசு தலைவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக உதகைக்கு புறப்பட்டுச் சென்றார். பகல் 12.30 மணியளவில் உதகை ராஜ்பவன் வந்தார் குடியரசுத் தலைவர். வழியில் தாவரவியல் பூங்கா வழியாகச் செல்லும்போது அங்கிருந்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தார்.
ராஜ்பவன் வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குடியரசுத் தலைவரை வரவேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் இரவு உதகை ராஜ்பவனுக்கு வந்தார். குடியரசுத் தலைவரை வரவேற்ற பின்னர் உடனடியாக சென்னை திரும்பினார் ஆளுநர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
தொடர்ந்து, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகளிடையே பேசுகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் உதகை ராஜ்பவன் திரும்புகிறார். நாளை மாலை 6 மணிக்கு ராஜ்பவனில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் 6 வகை பழங்குடி மக்களை சந்தித்துப் பேசுவதுடன், அவர்களின் பாரம்பரிய கலை நிகழ்சிகளைப் பார்வையிடுகிறார். பின்னர், 5 அரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மக்கள் கைவண்ணத்தில் உருவான பொருட்களைப் பார்வையிடுகிறார். மேலும், பழங்குடி மக்களுடன் இரவு உணவு சாப்பிடுகிறார். வரும் 30-ம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி உட்பட்ட மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் வருகை ரத்து: வரும் 30-ம் தேதி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகிறார் குடியரசுத் தலைவர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் அவர், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கி, கார் மூலம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோயிலில் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்யும் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.