நீங்கும் புயல் ஆபத்து - “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற 12 மணி நேரம் ஆகும். அது, வரும் 30-ம் தேதி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் - புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு நோக்கி 3 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுவையில் இருந்து 420 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம் ஆகும். வரும் 30-ம் தேதி இந்தப் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட தமிழகம் - புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்” - காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதனிடையே, இந்திய வராலாற்றைப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங் என அவரது 16-வது ஆண்டு நினைவு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக அரசு மீது ராமதாஸ் சாடல் - “தமிழகத்துக்குள் சமூக நீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு. தெலங்கானாவில் 20 முதல் 25 நாட்களில் நடத்தி முடிக்கப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணகெடுப்பை தமிழகத்தில் நடத்த முடியாதா? அதற்கான மனிதவளம் தமிழகத்தில் இல்லையா? அதற்கான நிதி தமிழகத்தில் இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இல்லை,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.
உதகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக குடியசுத் தலைவர் திரவுபதி முர்மு புதன்கிழமை விமான மூலம் கோவை வந்தார். கோவையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் உதகை வந்தடைந்தார். ராஜ் பவன் வந்த குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நிதி நிறுவன மோசடி விவகாரம்: ED தகவல் - சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இசைவாணி பிரச்சினை: திருமாவளவன் கருத்து: அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதானியை கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்: தொழிலதிபர் கவுதம் அதானி மீதனான குற்றச்சாட்டு தொடர்பாக அவரை கைது செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், இது ‘சோரோஸின் திரைக்கதை’ என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, "இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி ஏற்றுக்கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக அவர் மறுக்கத்தான் போகிறார்.
அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. ஆயிரம் கோடிகள் மோசடிகளுக்காக அதானி அமெரிக்காவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருக்க வேண்டும். அரசு அவரைப் பாதுகாக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் தாக்குதலுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன், அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸின் திரைக்கதையை இங்கு அரங்கேற்ற காங்கிரஸ் முயல்கிறது என்று குற்றம்சாட்டினார்.
அதானி விவகாரத்தால் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு: கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்க்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக்டோபரில் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சி அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் இதுவரை சுமார் 3,750 பேர் உயிரிழந்த நிலையில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே 2 மாத போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா தனது ஆயுதக் குழுக்களை விலக்கிக் கொள்ளும்.
இதுபோல் இஸ்ரேலும் அங்கிருந்து தனது படைகளை திரும்பப் பெறும். தெற்கு லெபனானில் அந்நாட்டு ராணுவ வீரர்களும் ஐ.நா. அமைதிப் படையினரும் நிறுத்தப்படுவார்கள். அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு போர் நிறுத்த நடைமுறைகளை கண்காணிக்கும். ஒப்பந்த நிபந்தனைகளை ஹிஸ்புல்லா மீறினால் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
புதிய உச்சத்தில் தமிழக பால் உற்பத்தி: அமைச்சர் - “பால் உற்பத்தியில் தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் தனிநபருக்கு கிடைக்கும் பாலின் அளவு 2019 - 2020 ஆண்டில் நாளொன்றுக்கு 316 கிராமாக இருந்தது. 2022 - 2023 ஆம் ஆண்டில் அது 369 கிராமாக உயர்ந்திருக்கிறது” என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.