கோவை: கோவையில் இரண்டாம் நாளாக இன்று தொடர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் காத்திருப்பு பேராட்டத்தால், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று பரிசீலிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
மேம்படுத்தப்பட்ட ஊதியம், கூடுதல் பணியாளர்களை நியமித்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 350 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால் வழக்கமான மனுக்களை மக்களிடம் இருந்து பெற்று பரிசீலிப்பது, கோப்புகள் சரிபார்ப்பு, சான்றிதழ் வழங்கல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடங்கின.
இது குறித்து வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செந்தில் கூறும்போது, "மற்ற அரசு துறைகளுடன் ஒப்பிடுகையில் வருவாய்த்துறையினருக்கு கூடுதல் பணிச் சுமை உள்ளது. எனவே மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் 1,500 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை விரைந்து நிரப்ப வேண்டும். புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சங்கத்தில் 400 பேர் உள்ள நிலையில் விடுப்பு, பயிற்சி உள்ளிட்ட காரணங்களால் 50 பேர் பங்கேற்கவில்லை. மீதமுள்ள 350 பேரும் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் முடங்கின. இன்று இரவு நடத்தப்படும் பேச்சுவார்த்தையை பொறுத்து போராட்டம் தொடர்வதாக அல்லது கைவிடப்படுமா என்பது தெரியவரும்" என்று செந்தில் கூறியுள்ளார்.