புதிய சர்ச்சை: மதுரை மேயருக்கு முதல் முறையாக 2 பி.ஏ.-க்களா?


மேயர் இந்திராணி | கோப்புப் படம்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கு ஏற்கெனவே நேர்முக உதவியாளராக (பி.ஏ) மரகதவல்லி பணியில் உள்ள நிலையில், இரண்டாவதாக உதவி பொறியாளர் பொன்மணி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி உள்ளார். இவருக்கு ஏற்கெனவே நிர்வாகப் பணிகளில் ஆலோசனை செய்வதற்காக, சிறப்பு ஆலோசகராக அரச்சனா உள்ளார். இவரை தவிர்த்து மேயரின் அன்றாடப் பணிகளை ஒருங்கிணைப்பது, அலுவலகப் பணிகளை கண்காணிப்பதற்காக நேர்முக உதவியாளராக (பி.ஏ.,) இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம் இருந்தார்.

அவரை, திடீரென்று சமீபத்தில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், நாவலர் சோமசுந்தர பாரதியாளர் மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக அதிரடியாக பணியிடமாற்றம் செய்தார். இவருக்கு பதிலாக மண்டலம்-1 அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த மரகதவல்லியை, மேயரின் நேர்முக உதவியாளராக ஆணையாளர் நியமித்தார். அப்போது, இந்த பணியிடமாற்றத்தில் மேயருக்கு விருப்பமில்லை எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், 31வது தல்லாக்குளம் வார்டு, மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் அலுவலகங்கள், முகாம்களில் பொறியியல் பணிகளை ஒருங்கிணைக்கும் உதவி பொறியாளர் பொன்மணி தற்போது கூடுதல் பொறுப்பாக மேயரின் பி.ஏ.,வாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது. மேயர் அலுவலகத்தில் சமீபத்தில் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்ட மரகதவல்லி இருக்கை, பொன்மணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மரகதவல்லிக்கு மற்றொரு இருக்கை ஒதுக்கப்பட்டு பொன்மணிக்கு மேயர் அலுவலகத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேயரின் சிறப்பு ஆலோசகராக அர்ச்சனா, நேர்முக உதவியாளராக மரகதவல்லி, தற்போது பொன்மணி என்று ஒரு ஆலோசகர், இரண்டு நேர்முக உதவியாளர்கள் முதல் முறையாக மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். பொன்மணி, மேயரின் நேர்முக உதவியாளராகவும் செயல்படுவதால் அவருடைய பொறியியல் பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது குறித்து மேயர் அலுவலக அதிகாரி கூறியதாவது, "பொன்மணி 31, 33, 34 ஆகிய வார்டுகளில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 31வது வார்டு உதவியாளர் பணி மட்டும் பார்த்து வருகிறார். அவர் தற்போது கூடுதல் பொறுப்பாக மதியம் வரை மேயரின் நேர்முக உதவியாளராகவும், அதன் பிறகு பொறியியல் பணியும் பார்த்து வருகிறார்" என்று அதிகாரி கூறினார்.

மாநகராட்சி உயர் அதிகாரி கூறியதாவது, "31 வது வார்டு உதவிப்பொறியாளர் பணியுடன் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் அலுவலகங்கள், முகாம்களில் பொறியியல் பணி மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது உடல் நல குறைபாடை கருத்தில் கொண்டு இந்த பணி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு மேயரின் நேர்முக உதவியாளர் பணி எதுவும் வழங்கப்படவில்லை. அவர் அப்படி செயல்பட்டால் தவறு. கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரியிடம் கூறினார்.

x