கோவாவில் நீர்மூழ்கி கப்பல் மோதி மாயமான குமரி மீனவர் - மீட்டுத் தர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை 


குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தெற்காசிய மீனவ பிரதிநிதிகள், மற்றும் கடலில் மாயமான மீனவரின் குடும்பத்தினர் மற்றும் மாயமான மீனவர் ஜெனிஷ்மோன்.

நாகர்கோவில்: நீர்மூழ்கி கப்பல் மோதி மாயமான குமரி மீனவர் உட்பட இருவரை நீர்மூழ்கி வீரர்களை பயன்படுத்தி மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்திய நீரமூழ்கி கப்பல் மோதி மாயமான குமரி மீனவரையும், ஒடிசா மீனவரையும் இந்திய கப்பல் படை நீரமூழ்கி வீரர்களை பயன்படுத்தி மீட்க தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் டன்ஸ்ட்டன் ஆகியோர் மீனவர் குடும்பத்துடன் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவை இன்று சந்தித்து மனு அளித்தனர். இதே கோரிக்கை மத்திய அரசுக்கும், தமிழகம் மற்றும் கோவா அரசிற்கும் விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கோரிக்கை மனுவில், ‘தமிழகம் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாட்டை சார்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன், மைக்கேல்நாயகம் மகன் கிளைமான்ஸ், ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்த இரு மீனவர்கள், ஒடிசாவைச் சார்ந்த இரண்டு மீனவர்கள், மேற்குவங்கத்தைச் சார்ந்த 6 மீனவர்கள் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியைச் சார்ந்த லெஜு என்பவருக்குச் சொந்தமான மார்தோமா என்ற விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இம்மாதம் 21ம் தேதி கோவா கடலில் சுமார் 70 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இந்திய கப்பல் படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதியதில் அது, கடலில் மூழ்கியது. இதில் ஆறு மீனவர்கள் கோவா மீனவர்களால் மீட்கப்பட்டனர். 5 மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது. படகோடு மூழ்கிய இரு மீனவர்களும் விசைப்படகுக்குள் மாட்டிக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

படகு ஓட்டுநராகிய கொட்டில்பாட்டைச் சார்ந்த ஜெனிஷ்மோன் மற்றும் ஒடிசாவைச் சார்ந்த ரமேஷ் ஆகிய இரண்டு மீனவர்களும் படகுடன் மூழ்கியுள்ளனர். அவர்கள் இன்றுவரை மீட்கப்படவில்லை. இந்திய கப்பல் படை நீர் மூழ்கி வீரர்களை பயன்படுத்தி கடலில் 90 மீட்டர் ஆழத்தில் மூழ்கி கிடக்கின்ற படகுக்குள் சிக்கியுள்ள மீனவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஏற்கனவே 2019 ஆண்டில் இதுபோன்று நீர்மூழ்கி கப்பல் மோதி 16 மீனவர்களை உயிர் பலியாக்கியுள்ளது. மூன்று மீனவர் படகுகள் மூழ்கடிக்க பட்டுள்ளது. இப்போது நடந்துள்ளது நான்காவது விபத்தாக்கும். எனவே, மத்திய அரசும் இந்திய பாதுகாப்பு படையும் மீனவர்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் வழங்க வேண்டும். நீர் மூழ்கி கப்பல் மாலுமி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு மத்திய அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

x