விருதுநகர்: மருத்துவர்கள் போராட்டம் காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கூட்டங்கள் புறக்கணிப்பு, ஆய்வுக் கூட்டங்கள், பதிவேடு புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் பங்கேற்க வழக்கம்போல் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று குவிந்தனர்.
ஆனால், பகல் 11.45மணி வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் தொடங்கப்படவில்லை. அதன்பின்னர், மருத்துவர்கள் போராட்டம் காரணமாக மருத்துவ முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்து காலை 7 மணி முதல் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் ஆத்திரமடைந்து மருத்துவர்களையும், மருத்துவமனை நிர்வாகத்தையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த போலீஸார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். டிஎஸ்பி பவித்ராவும் மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.