இன்று வங்கக்கடலில் புயல் உருவாக உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை உட்பட தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.