சிவகாசி: மக்கள் பிரச்சனைகளை அறிக்கையாக வெளியிட்ட மருத்துவர் ராமதாஸ் வேலையில்லாதவர் என்றால், முரசொலியில் தினம்தோறும் கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா? என பாமக மாநில பொருளாளர் திலகபாமா கேள்வி எழுப்பினார்.
சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து அதற்கான தீர்வுகளை அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். முதல்வர் ஸ்டாலின் தொழிலதிபர் அதானியை சந்தித்தது ஏன் என கேள்வி கேட்டு மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டது குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மருத்துவர் ராமதாஸை வேலையில்லாதவர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அப்படி என்றால் முரசொலியில் தினந்தோறும் கடிதம் எழுதிய கருணாநிதி வேலையில்லாதவரா?
மைனாரிட்டி அரசு என அதிமுக குற்றம்சாட்டிய போது திமுகவுக்கு கைகொடுத்தது பாமகதான். மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரிய வழக்கை பாமக திரும்பப் பெறாமல் இருந்திருந்தால், மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைத்திருக்க முடியாது.
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் மருத்துவர் ராமதாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியில்லாத தமிழக முதல்வர், அவரை வேலையில்லாதவர் என பேசி இருப்பது மோசமானது. இதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. விழுப்புரத்தில் முதல்வர் கால் வைக்க முடியாது. திமுகவின் பழைய அநாகரீக பேச்சுக்களை முதல்வர் கையில் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் .முதல்வரை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் ஓரிரு நாட்களில் போராட்டம் நடத்தப்படும்.
தருவைகுளத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்தி, தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டோம். மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இலங்கை அரசுக்கும் பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. தற்போது தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க செல்வதை மத்திய அரசு உறுதி செய்ய மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” இவ்வாறு திலகபாமா பேசினார். அப்போது பாமக மாவட்ட செயலாளர் டேனியல் உடன் இருந்தார்.