மதுரை: அரசு மருத்துவர்கள் மீதான அவதூறு நேர்காணல்களை ஒளிபரப்புவோர் மீது நடவடிக்கைக்கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "சென்னை கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி நவம்பர் 14-ம் தேதி விக்னேஷ் என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தையடுத்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு சமூக வலை தளங்கள் மற்றும் ஊடகங்களில் மருத்துவர் பாலாஜிக்கு எதிராக கைது செய்யப்பட்ட நபரின் தாயார் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கும் அவதூறு நேர்காணல்கள் வெளியானது. அரசு மருத்துவர்களின் மதிப்பை கெடுக்கும் வகையிலான பதிவுகளை உண்மைநிலை தெரியாமல் பலர் பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அரசு மருத்துவர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. அரசு மருத்துவர்களின் கடும் முயற்சியால் சிசு மரண விகிதம் கடுமையாக குறைந்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை பல்வேறு மாநிலங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசிடம் இருந்து சுகாதாரத் துறை பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு மருத்துவர்களின் பங்கு முக்கியமானது.
இந்த சூழலில் அரசு மருத்துவர்கள் மீது அவதூறு பரப்புவது தவறானது. எனவே மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் நேர்காணல்களை ஒளிபரப்பு தடை விதித்தும், அவதூறு நேர்காணல்களை ஒளிபரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சதீஷ்பாபு வாதிட்டார். வாதங்களை பதிவு செய்த நீதிபதி, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.