புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம்: புதுச்சேரியில் ஆபத்தை உணராமல் படகுகளில் அழைத்துச் செல்லப்படும் சுற்றுலாப் பயணிகள்!


புதுச்சேரி: புயல் எச்சரிக்கை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் சூழலில், ஆபத்தை உணராமல் சுற்றுலாப் படகுகளில் பயணிகளை தனியார் நிறுவனத்தினர் அழைத்து செல்கின்றனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக கடலுக்குள் மீன்பிடி படகுகள் செல்லவில்லை. அவை அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படும் தனியார் சுற்றுலாப் படகுகள் எந்த ஒரு தடையும் இன்றி வழக்கம் போல் தற்போதும் செயல்படுகின்றன.

இவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அலையின் சீற்றத்தை எதிர்த்து செல்வதை பலரும் பதைபதைப்புடன் பார்த்தனர். கடலில் இப்படகுகள் சாகசம் செல்வது போல் செல்கிறது. உயிர் பயத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த படகுகள் செல்வதாக கரையிலிருந்து பார்த்தோர் குறிப்பிட்டனர்.

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை போல, சுற்றுலாப் படகுகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிளின் உயிரோடு விளையாடும் இந்த சுற்றுலா படகுகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

x