காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: கோவில்பட்டியில் தமாகா ஆர்ப்பாட்டம் 


காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை கண்டித்து கோவில்பட்டியில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதைக் கண்டித்து கோவில்பட்டியில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் வட்டங்களில் பெரும் பகுதி மானாவாரி நிலங்களே அதிகம் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி போன்ற பல்வேறு வேளாண்மை பயிர்களை கடந்த 3 ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், காட்டுப்பன்றிகள் தாக்கி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புதூர் பகுதியைச் சேர்ந்த 4 விவசாயிகள் காயமடைந்தனர்.

இந்நிலையில், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி இன்று கோவில்பட்டியில் தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தமாகா தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை வகித்தார். மாநில செயலாளர் திருப்பதி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் மேடை சேர்மன், மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ.கனி, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாவட்ட துணை தலைவர் கோமதி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தொடர்ந்து கே.பி.ராஜகோபால் கூறுகையில், ''கடந்த 21-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசிய ஆட்சியர், டி.என்.ஏ. பரிசோதனையில் பன்றிகள் நாட்டுப்பன்றி என தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளார். பயிர்களை சேதப்படுத்துவது காட்டுப்பன்றிகளோ நாட்டுப்பன்றிகளோ அதனை கட்டுப்படுத்தி, விவசாயத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் ஒதுக்கும் அரசு, அவர்களின் நலனில் துளியும் அக்கறையின்றி செயல்படுவதையே ஆட்சியரின் பதிலில் தெரிகிறது. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்த மறுநாளே அயன்கரிசல்குளத்தில் 3 விவசாயிகளை பன்றிகள் கடித்து குதறி உள்ளன. இதனால் விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலைக்கு வர அச்சமடைந்துள்ளனர். விவசாயிகளே தங்களது நிலங்களுக்கு செல்வதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் செயல்.

எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், டிசம்பர் 17-ம் தேதி அனைத்து விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தூத்துக்குடி -மதுரை நான்குவழிச்சாலையில் வெம்பூர் விலக்கு பகுதியில் மறியல் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

x