ஈரோடு: ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில், ரூ.250 மதிப்புள்ள, 180 மில்லி அளவுள்ள மதுபான பாட்டிலை வாங்கியுள்ளார். இந்த மதுபான பாட்டிலுக்கு, ரூ.10 கூடுதலாகக் கொடுக்க வேண்டும் என கடையின் விற்பனையாளர் கேட்டுப் பெற்றுள்ளார்.
இதற்கான தொகையை டிஜிட்டல் முறையில் செலுத்திய தங்கவேல், கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக, ஆதாரத்துடன் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து தங்கவேல் கூறியதாவது: “அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், மதுபான பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், மதுபானத்திற்கு உரிய தொகையை மட்டும் செலுத்தும் வகையில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
ஆனால், இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகும், பாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக வசூலிப்பது தொடர்கிறது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆட்சியர் அலுவலகத்தில் புகாராக அளித்துள்ளேன். டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுப்பதோடு, வசூல் செய்த கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.