புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டம் புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், அமைப்புகள் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு அகில இந்திய முடிவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், சிஐடியு மாநில செயலாளர் சீனிவாசன், ஐஎன்டியுசி மாநில செயலாளர் தமிழ்செல்வன், ஏஐசிசிடியு மாநில செயலாளர் புருஷோத்தமன், எல்எல்எப் மாநில செயலாளர் செந்தில், புதுச்சேரி விவசாய சங்க தலைவர் கீதநாதன், புதுச்சேரி காங்கிரஸ் விவசாய அணி தலைவர் முருகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் மூலம், குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள், வேளாண் இடு பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைக்க வேண்டும். மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு கரோனா என்ற பெயரில் பறிக்கப்பட்ட ரயில்வே சலுகைகளைத் திரும்ப வழங்க வேண்டும்.
மின்சாரம் (திருத்த) மசோதா, 2022-ஐ திரும்பப் பெற வேண்டும். முன் பணம் செலுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கைவிட வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் நாளொன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்கும் வகையில் திட்டத்தை விரிவாக்கி செயல்படுத்த வேண்டும். 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைள், 3 குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விரிவான கொள்கையை உருவாக்கி தற்போதுள்ள மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு, ஒழுங்குமுறை) சட்டம் 1979-ஐ வலுப்படுத்தி விரிவான சமூக பாதுகாப்பு விதிகளோடு செயல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை முழுவதும் கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்து, அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு வரி விதிக்க வேண்டும்.
கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்த வேண்டும். ரத்து செய்யப்பட்ட, செல்வ வரி மற்றும் வாரிசு வரியை மறுபடியும் அமல்படுத்த வேண்டும். கருத்து சுதந்திரம், கருத்தில் வேறுபடும் உரிமை, மத சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட பண்பாடுகள், மொழிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம், நாட்டின் கூட்டாட்சி முறைமை போன்ற அரசியல் சாசனத்தில் அடிப்படை விழுமியங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.
புதுச்சேரி அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தை நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளை திறந்து அனைத்து அத்தியாவசிய பொருட்களையும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியமும் வழங்க வேண்டும். மூடிக் கிடக்கும் நிறுவனங்களை திறந்து நடத்திட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.