திருச்சி: திருச்சியில் 9 அம்ச கோரிக்கைளை வலியறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், ‘மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடனடியாக வெளியிட வேண்டும்.
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் இருந்துவரும் பல்வேறு பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசானது எடுத்து வரும் நிலையில் தற்போது நகர்புற நிலவரித் திட்டம் (யுஎல்ட) தமிழகம் முழுவதம் உள்ள பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைப்பட எடுக்கும் நடவடிக்கையை அரசு முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும் இரண்டு ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல் மற்றும் நடப்பாண்டுக்கான மாவட்ட வருாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பொன்மாடசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ராமலட்சுமி, துணைத் தலைவர் ராஜவேல், இணைச் செயலாளர்கள் சங்கர நாராயணன், சண்முக வேல் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபட்டதால் வருவாய்த் துறை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டது.