கொடைக்கானல்: பழைய ஒரு வழிப்பாதையை அமல்படுத்தக்கோரி, கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் கலையரங்கம் பகுதியில் இருந்து சூரிய ஆய்வு கூடம், ரோஜா பூங்கா, மோயர் சதுக்கம், குணா குகை வழியாக சென்று சுற்றுலா இடங்களை பார்வையிட வசதியாக ஒருவழிப் பாதை நடைமுறையில் இருந்தது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் வழியாக 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட வசதியாக ஒரு வழிப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், இந்த சாலையில் சுற்றுலா பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், உள்ளூர் சுற்றுலா வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்பட்டது. வழித்தட மாற்றத்தால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று (செவ்வாய்கிழமை) பழைய ஒரு வழிப் பாதையை அமல்படுத்தக்கோரி, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், குணா குகை பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.