ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை மையம்


சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது, என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 310 கிமீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்-தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்-தென்கிழக்கே 710 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து இலங்கைக் கடற்கரையை நோக்கி நகரும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது

ஃபெங்கல்: இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகவுள்ள புயலுக்கு ஃபெங்கல் (FENGAL) என பெயரிடப்படவுள்ளது. இது சவுதி அரேபியா நாடு பரிந்துரைத்த பெயராகும்.

x