சென்னை: தமிழகத்தில் 4 நாட்கள் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 8.38 லட்சம் விண்ணப்பங்கள் உட்பட மொத்தம் 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 29-ம் தேதி தொடங்கின.
ஏற்கெனவே அறிவித்தபடி, முதல்கட்டமாக கடந்த நவம்பர் 16, 17-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் நவம்பர் 23, 24-ம் தேதிகளில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடைபெற்றன.
இந்த 2-ம் கட்ட முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பதற்காக படிவங்கள் பெறப்பட்டன. அதன்படி பெயர் சேர்க்க 3 லட்சத்து 95,981 விண்ணப்பங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் 4 விண்ணப்பங்கள், ஆதார் இணைப்புக்கு 364, பெயர் நீக்கம் செய்ய 75,573, திருத்தம் மேற்கொள்ள 2 லட்சத்து 43,180 என மொத்தம் 2 நாட்களில் 7 லட்சத்து 15,102 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
4 நாட்கள் நடைபெற்ற முகாமிலும் சேர்த்து, பெயர் சேர்க்க 8 லட்சத்து 38,016, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைப்புக்கு 783, பெயர் நீக்கம் செய்ய 1 லட்சத்து 19,701, திருத்தம் மேற்கொள்ள 4 லட்சத்து 42,111 என மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.