மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுகூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மற்றும் டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள் இடையே அடிதடி மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக கள ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மதுரை மாநகர அதிமுக கள ஆய்வுக்கூட்டம், காமராஜர் சாலையில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை கலந்து கொண்டனர். மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ-க்கள் அண்ணாதுரை, டாக்டர் சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது, ‘‘கள ஆய்வுக்கூட்டத்தின் நோக்கம், சில தரவுகளைப் பெற்று பொதுச்செயலாளர் கவனத்துக்கு கொண்டு செல்வதுதான். இதுவரை மாநகரில் கட்சி செயல்பாடுகள், திருப்திகரமாக இருக்கிறதா? தலைமைக் கழகம் அறிவித்த போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் முறையாக நடந்துள்ளதா? கட்சி நிர்வாகிகள் தவறாமல் வந்துள்ளனரா?, பூத் கமிட்டி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். செயல்படாதவர்களை மாற்ற வேண்டும். பகுதிவாரியாக நிர்வாகிகள் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். குற்றம், குறைகளை தெரிவித்தால் இந்த கூட்டத்தின் நோக்கம் திசை திரும்பிவிடும்’’ என்றார்.
அதன்பின் முன்னாள் அமைச்சர் செம்மலை, பகுதிவாரியாக நிர்வாகிகளின் கருத்துகளை கேட்கத் தொடங்கினார். கூட்டம் சுமுகமாக முடியும்போது, திடீரென பைக்காராவைச் சேர்ந்த செழியன், பீபீ குளம் ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உட்பட சிலர் மேடையேறி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஒரு மனுவை வழங்கினர். மேலும் கள ஆய்வுக்கூட்டத்தில் தங்கள் கருத்துகளையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அப்போது அங்கிருந்த செல்லூர் ராஜு ஆதரவாளர்கள், அவர்களை பார்த்து “நீங்களெல்லாம் யாரு, பல கட்சிக்கு போய் வந்துவிட்டு கருத்து சொல்ல வந்துவீட்டீர்களா? என ஒருமையில் பேசி எச்சரித்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தகராறுக்கு டாக்டர் சரணவன்தான் காரணம் எனக்கூறி அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றும்படி செல்லூர் ராஜு ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். திடீரென நடந்த இந்த தள்ளுமுள்ளு மற்றும் அடிதடியால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி எதிர்க்கட்சி துணைத் தலைவர் சோலைராஜா, ‘திட்டமிட்டு கூட்டத்தில் தகராறு செய்ய நினைக்காதீர்கள்’’ என்று எச்சரித்தார். பின்னர் எதிர்ப்பாளர்களைக் கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.
மேடையில் இருந்த செல்லூர் கே.ராஜு, அருகில் இருந்த டாக்டர் சரவணனிடம், “இதுவெல்லாம் உன் வேலைதானேயப்பா” என நேரடியாக கேட்டார். அதற்கு சரவணன், ‘இல்லண்ணே...’ என்று சமாளித்தபோது, செல்லூர் ராஜு, ‘தெரியும்ப்பா எல்லாம்’ என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் டாக்டர் சரவணன் அமைதியாக மேடையை விட்டு கீழே இறங்கினார்.
முன்னாள் அமைச்சர் சமாளிப்பு: கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் நத்தம் விஸ்வநாதன் கூறும்போது, ‘‘அதிமுக கள ஆய்வில் எந்த பிரச்சினையும் இல்லை. சில நிர்வாகிகள் பேசுவதற்கு வாய்ப்பு தரும்படி கூறினோம். ஆனால் திட்டமிட்டு பிரச்சினை ஏற்பட்டது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்’’ என்றனர்.
மதுரை கிழக்கிலும் வாக்குவாதம்: மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை திருப்பரங்குன்றத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். கூட்டம் முடிந்ததும் நத்தம் விஸ்வநாதன், செம்மலையுடன் புகைப்படம் எடுப்பதிலும், அவர்களுக்கு பொன்னாடை அணிவிப்பதிலும் சிலர் ஆர்வம் காட்டினர். கட்சி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ், விரைவாக புகைப்படம் எடுத்துவிட்டு மேடையை விட்டு கிளம்புங்கள் எனக் கூறியுள்ளார். இதில் அதிருப்தியடைந்த நிர்வாகிகள் சிலர், ரமேஷூடன் வாக்குவாதம் செய்ததால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே மாவட்ட நிர்வாகிகள் தலை யிட்டதால் பிரச்சினை முடிவுக்கு வந்தது. முன்னாள் அமைச் சர்களும் புறப்பட்டுச் சென்றனர்.