குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு உதகையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகை


நீலகிரி மாவட்டம் உதகைக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை (நவ.27) வருவதையொட்டி, தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை உதகை வர உள்ளார். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வரும் அவர் உதகை ராஜ்பவனில் தங்குகிறார். 28-ம் தேதி சாலை மார்க்கமாக குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்குச் செல்கிறார். அங்கு போர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதையொட்டி, உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஹெலிகாப்டர் தளத்தில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையிலிருந்து உதகைக்கு குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரில் வருவதால், 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வானத்தில் வட்டமடித்தவாறு தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் 3 முறை தரை இறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. கூடுதல் எஸ்.பி சவுந்திரராஜன், டிஎஸ்பி யசோதா ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டனர்

x