மதுரை: மதுரையில் அரசுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்கப்பட்ட புகாரை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
மதுரை தல்லாகுளத்தில் 31 ஏக்கர் அரசு நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத் தலைவர் தேவசகாயம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், மதுரை தல்லாகுளத்தில் 31 ஏக்கர் நிலம் ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்துக்காக வழங்கப்பட்டது. இந்த நிலங்களை மதுரை–ராமநாதபுரம் திருமண்டில சிஎஸ்ஐ நிர்வாகம் மோசடியாக விற்றுள்ளது. இந்த மோசடிக்கு அதிகாரிகள் பலர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்து, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்த செய்யவும், தடை விதிக்கவும் கோரி மதுரை–ராமநாதபுரம் திருமண்டில சி.எஸ்.ஐ. நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் அவசர மனுவாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது சிபிஐ தரப்பில், "இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க போதிய முகாந்திரம் உள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டியதில்லை. மேலும் குற்றவியல் வழக்குகளில் தனி நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே இந்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், தனி நீதிபதியிடம் அளிக்கப்பட்ட மனுவில் ரூ.ஒரு கோடியே 21 லட்சத்துக்கு இடம் விற்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ரூ.10 கோடியே 22 லட்சத்துக்கு இடம் விற்கப்பட்டு அந்த தொகை பல கல்லூரிகளின் வளர்ச்சி பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. அதோடு 2008ம் ஆண்டில் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்த நிலையில், 2020ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "இந்த வழக்கில் சிபிஐ இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?. மனுதாரர் கோரிய நிவாரணத்தை தாண்டி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதால், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என சிபிஐ தெரிவித்து இருப்பதால், அது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டும். விசாரணை 2 வாரம் தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.