மதுரை: மக்கள் அளிக்கும் மனுக்களை அதிகாரிகள் காலவரம்பு இல்லாமல் நிலுவையில் வைப்பது கடமை தவறுவது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: "பரமக்குடி தாலுகா எமனேஸ்வரத்தில் அரசு புறம்போக்கு கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் பகுதியில் தனி நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை ரத்து செய்யவும், கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கோரி ஆகஸ்ட் 10ம் தேதி மாவட்ட ஆட்சியர், பரமக்குடி கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு மனு அனுப்பினோன். அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அரசு புறம்போக்கு கண்மாயில் தனி நபர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மனுதாரர் மனு அளித்துள்ளார்.
இதுபோல் மனு அளிக்கும் போது அந்த மனுக்களை காலவரம்பு இல்லாமல் நிலுவையில் வைக்காமல் தகுதி அடிப்படையில் பரிசீலனை செய்து சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். அதிகாரிகள் மனுக்களை பரிசீலிக்காமல் இருப்பது கடமை தவறுவது ஆகும். இதனால் மனுதாரர் அளித்த மனுவை தகுதி அடிப்படையில் பரிசீலித்து 3 மாதத்தில் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.