குமரி முக்கோண பூங்காவில் கருணாநிதிக்கு வெண்கல சிலை - பேரூராட்சி கூட்டத்தில் முடிவு


 கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கோண பூங்காவில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்க அனுமதிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி அலுவலக அவைக்கூடத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், மற்றும் வார்டு உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துணை தலைவர் ஜெனஸ் மைக்கேல், கன்னியாகுமரி முக்கோண பூங்காவில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி சிலை அமைப்பதற்கான தீர்மானத்தை முதன் முதலாக நிறைவேற்றவேண்டும் என்று கூறினார். அதற்கு பாஜக கவுன்சிலர் சுபாஷ் எழுந்து கூட்ட பொருள் 6ல் உள்ளதை முதலில் வாசிக்க கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கூட்டப்பொருளில் உள்ள வழக்கமான தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி முக்கோணப் பூங்காவை ரூ.44 லட்சம் செலவில் விரிவுபடுத்தி அழகுபடுத்துவது, திருவள்ளுவர் சிலை நிறுவ காரணமாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அவரது முழு உருவ வெண்கல சிலையை முக்கோண பூங்காவில் அமைக்க அனுமதி வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர் சுபாஷ், அ.தி.மு.க. கவுன்சிலர் நித்யா ஆகியோர் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். கன்னியாகுமரி கடற்கரை சாலைக்கு திருவள்ளுவர் சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் கூட்டத்தில் அரசை வலியுறுத்தப்பட்டது.

x