பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் நவ. 26ல் அரசியலமைப்பு முகப்புரையை வாசிக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு


அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் நாளை அரசியலமைப்பு சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டது. இது 1950 ஜனவரி 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் விதமாக நாடு முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின் 75-ம் ஆண்டு தற்போது கொண்டாடப்படும் நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: மக்களாட்சி தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்து தந்த நமது அரசியலமைப்பு சட்டம்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவம்பர் 26-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அலுவலகங்கள், சார்நிலை அலுவலகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள், அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சு போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

x