நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பதாக கைத்தறித் துறை அறிவிக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக தவறான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, அமைச்சர் ஆர்.காந்தி கண்டனம தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கடந்த 22-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க உள்ளதாக அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையால் எவ்வித அறிவிப்போ, அரசாணையோ வெளியிடப்படவில்லை. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பிடப்பட்டு, வணிகப் பயன்பாடு மற்றும் வீட்டுப் பயன்பாடு எனக் கண்டறிய, மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்ய, சென்னை தவிர்த்த அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள்) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில்போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.
மேலும், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல்கள் மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் நூல்விலை நிர்ணயக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, நூல்விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதும் ஆதாரமற்றதாகும்.
இலவச சீருடை மற்றும் வேட்டி சேலைகளை, நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இலவச சீருடை, வேட்டி சேலை பணிகள் நெசவாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கப்படுகிறது என்பதும், 3-ல் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் தவறாகும்.
இலவச மின்சாரம் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுகிறது. நெசவாளர்களுக்கு எந்த திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதும் உண்மைக்கு புறம்பானதாகும்.
2021-22 முதல் 2023-25-ம் ஆண்டு அக். 31 வரை ரூ.794.25 கோடி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ்-க்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில் அவ்வப்போது அடிப்படைக் கூலி மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
2021 திமுக தேர்தல் அறிக்கையில் கைத்தறித் துறைக்காக அறிவிக்கப்பட்ட 13 வாக்குறுதிகளில், 12 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்குப் புறம்பான கருத்துகளை, சுய இலாபம் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக தெரிவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்