புதுச்சேரி: அவமதிப்பு தொடர்வதால் அதிகாரிகளை கண்டித்து அரசு விழாக்களை புறக்கணிக்கவுள்ளதாக பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸில் இருந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு மாறிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக தற்போதைய முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஆனால் அவரை சுயேட்சையாக போட்டியிட்ட கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வீ்ழ்த்தினார். அதையடுத்து தேர்தலில் போட்டியிடாத மல்லாடி கிருஷ்ணாராவுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தரப்பட்டது. அதையடுத்து தொகுதி எம்எல்ஏவுக்கும், டெல்லி சிறப்பு பிரதிநிதிக்கும் இடையே மோதல் அரசியல் ரீதியாக அதிகரித்தது.
எம்எல்ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், அரசு விழாக்களில் தன்னை அதிகாரிகள் அவமதிப்பதாகவும், தேர்தலில் தோற்றுவிட்ட பிறகும் அரசால் நியமிக்கப்பட்ட டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி பெயரை அழைப்பிதழ்களில் குறிப்பிட்டு மோதல் போக்கை உண்டாக்குவதாக புகார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ஏனாம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டமன்ற உரிமை மீறல் குழுவிடம் புகார் அளித்த பிறகும், அதிகாரிகள் நடந்ததையை மாற்றிக்கொள்ளவில்லை. அரசு நெறிமுறைப்படி அதிகாரிகள் செயல்படவில்லை. நான் ஜானநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளேன். புதுச்சேரி அரசால் நியமனம் செய்யப்பட்ட மல்லாடி கிருஷ்ணாராவ் பெயரை அழைப்பிதழில் வெளியிடுவதும், ஒரே மேடையில் இருவரையும் அழைப்பதும் நெறிமுறைக்கு எதிரானது.
அப்படி செய்தால் அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவை அவமரியாதை செய்வதாகும். அதே நேரத்தில் ஏனாமை தவிர்த்து புதுச்சேரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் மல்லாடி கிருஷ்ணாராவ் பெயரை அதிகாரிகள் குறிப்பிடாதது ஏன் என்பது என்னுடைய கேள்வி. உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து நெறிமுறைகளுக்கு எதிராக அழைப்பிதழில் மல்லாடி கிருஷ்ணாராவ் பெயரை அச்சிடுவதையும், ஒரே மேடையில் இருவரையும் அழைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எனவே நான் ஒரு முடிவு செய்துள்ளேன். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அரசு நிகழ்ச்சிகளையும், குறிப்பாக கல்வித் துறையின் கீழ் நடந்து வரும் அறிவியல் கண்காட்சி நிறைவு நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன்” இவ்வாறு ஏனாம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.