சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி டிச.12-ல் தர்ணா போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் கூறியது: "ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஓய்வு கால பணப்பலன், மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். அனைத்துத் துறையின் ஓய்வு பெற்றவர்களும் அகவிலைப்படி உயர்வு பெறும்போது, போக்குவரத்துத் துறையில் மட்டும் 9 ஆண்டுகளுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்படுகிறது.
அதேநேரம், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ம் தேதி, சென்னை பல்லவன் சாலையில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும்.
இந்த தர்ணாவுக்கு சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகிக்கிறார். இதில் அனைத்து கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது முற்றிலும் ஓய்வூதியர்கள் நலன்களை முன்வைத்து நடத்தப்படும் தர்ணா போராட்டம் என்பதால் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்பர்" என்று ஆறுமுக நயினார் கூறினார்.