கும்பகோணத்தில் நாய்கள் கடித்து 4 குழந்தைகள் உள்பட 8 பேர் காயம்


கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட பாணாதுறை தெற்குத் தெருவில் தெரு நாய்கள் கடித்து 4 குழந்தைகள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

பாணாதுறை தெருக்களில் அண்மைக்காலமாக 50-க்கும் மேற்பட்ட நாய்களின் தொல்லை அதிகரித்து வந்தது. இதுதொடர்பாக அந்தப் பகுதி 19-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆதி லட்சுமி ராமமூர்த்தி, மாமன்ற கூட்டத்திலும், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி இருந்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரிந்த 50-க்கும் மேற்பட்ட நாய்கள், வீட்டின் முன்புறம் நின்றிருந்த விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகளையும், வேலைக்கு சென்ற பெண் உள்பட 8 பேரை கைகள், கால்கள் மற்றும் உடல்களில் கடித்து குதறியது. இதனால் அவர்களுக்குப் பலத்த காயமடைந்தது. இதனையறிந்த அருகில் உள்ளவர்கள், அந்த நாய்களை விரட்டியடித்து, அவர்களை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த 4 குழந்தைகளை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ளவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக மாமன்ற உறுப்பினர் ஆதி லட்சுமி ராமமூர்த்தி, மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததின் பேரில், மாநகர் நல அலுவலர் திவ்யா மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் இரா.லட்சுமணன் கூறியது, பாணாதுறையில் பொதுமக்களை நாய்கள் கடித்து காயமடைந்ததாகத் தகவல் வந்தது. இதையடுத்து, உடனடியாக அங்குள்ள நாய்கள் பிடிக்கப்படும். மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களையும் தொடர்ந்து பிடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

x