இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னையில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள், 2,000 பிளாஸ்க் அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழ்நாடு திருக்கோயில்கள், உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்குவதற்காக முதல்கட்டமாக, 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட், ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 2,000 பிளாஸ்க் ஆகியவை சென்னை பாடி படவேட்டம்மன் கோயில் வளாகத்தில் இருந்து 3 லாரிகள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சபரிமலை பக்தர்களுக்காக கடந்த ஆண்டு இதேபோல அறநிலையத் துறை கோயில்கள் சார்பில் 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்கள் அனுப்பப்பட்டன. சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவும் வகையில், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் 24 மணிநேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்களுக்கு வழிகாட்டும் விதமாக, கண்காணிப்பாளர் நிலையிலான 2 அலுவலர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
துறை சார்பில் இந்த ஆண்டுக்கான ஐயப்பன் மலர் வழிபாடு வரும் 25-ம் தேதி மயிலாப்பூரில் நடைபெற உள்ளது. அறநிலையத் துறை சார்பில் சபரிமலையில் பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். திருப்பதியில் பக்தர்களுக்கான விடுதியை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருச்செந்தூர் கோயில் யானை ‘தெய்வானை’ தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அன்றைய தினம், யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது, யானை அதை அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அவர் முயற்சி செய்தபோது இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் 27 கோயில்களில் 28 யானைகள் உள்ளன. வனத்துறை அனுமதியுடன்தான் இவை பராமரிக்கப்படுகிறதா என்பதை சரிபார்க்குமாறு கூறப்பட்டுள்ளது. யானைகள்மீது கடந்த ஆட்சியைவிட இந்த ஆட்சி அதிக அக்கறை கொண்டுள்ளது.
திருச்செந்தூர், மதுரை, பழநி உள்ளிட்ட கோயில்களில் செல்போன் பயன்படுத்த ஏற்கெனவே தடை உள்ளது. படிப்படியாக மற்ற கோயில்களிலும் இதை செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கிய பிறகு, அனைத்து கோயில்களிலும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்