ஐயப்ப சுவாமி குறித்து அவதூறாகப் பாடியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர் மீது ஐயப்ப பக்தர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மக்கள் வணங்கும் முக்கிய கடவுளாக சபரிமலை ஐயப்பன் சுவாமி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐயப்ப சுவாமி குறித்தும், பக்தர்கள் மேற்கொள்ளும் விரதங்கள் குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, கானா பாடகி இசைவாணி, நீலம் கலாச்சார மையத்தைச் சேர்ந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.