“ஆட்சியில் பங்கு என சுயநலத்துடன் பேசுகின்றனர்” - கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்


கோவை: “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசுகிறார்கள். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள்” என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (நவ.23) நடைபெற்றது. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அவிநாசி சாலை மேம்பாலத்தை எங்களது கோரிக்கையை ஏற்று சின்னியம்பாளையம் வரை நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் 10 எம்.எல்.ஏக்கள் இருந்தும் ஒருவர்கூட முதல்வரிடம் இதை வலியுறுத்தவில்லை. கடைசி நேரத்தில் நான் தான் இக்கோரிக்கையை வைத்தேன் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பொய் தகவல் பரப்புகிறார். சென்னை மாநகராட்சியை போல், கோவை மாநகராட்சியை 2 ஆக பிரிக்க வேண்டும். வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என சில அரசியல் கட்சி தலைவர்கள் சுயநலத்துடன் பேசுகிறார்கள். விளைநிலங்கள் வழியாக கேஸ் லைன் பதிப்பது விவசாயிகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சியிலும், சீமானிடமும் வித்தியாசத்தை காண முடிகிறது. சீமான் போக்கில் மாற்றம் தெரிகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன.

அதற்குள் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றியெல்லாம் கேட்கிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தினால் அதை கொ.ம.தே.க. வரவேற்கும். அதானி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பது நல்லதல்ல. தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

x