காங்கிரஸில் சேர்த்தபோது லாட்டரி தொழிலதிபர்கள் பற்றி தெரியவில்லையா? - பாஜக கேள்வி


செல்வகணபதி | கோப்புப்படம்

புதுச்சேரி: காங்கிரஸில் சேர்த்தபோது லாட்டரி தொழிலதிபர்கள் பற்றி தெரியவில்லையா? வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தியாகிகள் குடும்பத்துக்கு காங்கிரஸ் சீட் தருமா? என்று புதுச்சேரி பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “காமராஜர் நகர் தொகுதியில் எம்எல்ஏ ஜான்குமார் ஏற்பாடு செய்த மாணவர் பரிசளிப்பு விழாவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்ல்ஸ் மார்ட்டின் கலந்துகொண்டார். அதில் பாஜக தலைவர் கருத்து என்ன? என மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேட்டுள்ளனர். எங்கள் கட்சி எம்எல்ஏ நடத்தும் விழாவில் யாரை அழைக்க வேண்டும் என அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

புதுச்சேரி தேர்தலில் மதுக்கடை நடத்தி தொழிலதிபர் ஆனவர்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சர்களாக இருந்துள்ளனர். செய்யும் தொழிலுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அதுகுறித்து பாஜக என்றும் விமர்சித்தது இல்லை. அதுபோல் தான் மார்ட்டின் மகன் அந்த விழாவில் கலந்து கொண்டார். பாஜவிலும் சேர்ந்துள்ளார். மார்ட்டின் வெளியூர்காரர் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். காங்கிரஸில் வெளியூரை சேர்ந்த பலரை எம்எல்ஏ, அமைச்சர் ஆக்கிய வரலாறு உள்ளது. பாஜக மீது பயம் வந்துவிட்டதால், இதுபோல பேசி வருகின்றனர். லாட்டரி தொழில் நடத்திய ஜான்குமார் காங்கிரஸில்தானே இருந்தார்.

அவரை கட்சியில் சேர்த்தது யார்? சீட் கொடுத்தது யார்? அவர் நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுக்கொடுத்த போது லாட்டரி தொழில் செய்தவராக தெரியவில்லையா?. வைத்திலிங்கம் எம்.பி தேர்தலில் வெற்றி பெற்ற பின் காமராஜ் நகர் தொகுதியை அதே ஜான்குமாருக்கு தானே விட்டுத்தந்தார்?. அப்போது மக்கள் மன்றத்தில் கேள்விகள் எழவில்லையா? காங்கிரஸார் கூறிய பதில்களை புரட்டி பார்த்துவிட்டு, வைத்திலிங்கமும், நாராயணசாமியும் இப்போது கேள்வி கேட்பது குறித்து சிந்திக்க வேண்டும். நான் பாஜக தலைவராக வந்த பின் 1 லட்சத்து 32 ஆயிரம் உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். பிரதமர் மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

எம்.பி தேர்தல் தோல்வியை வைத்து பாஜக வலிமையை குருட்டுத்தனமாக எடை போடக்கூடாது. அது தவறானது என 2026 சட்டப்பேரவை தேர்தல் எடுத்துச்சொல்லும். வரும் தேர்தலில் எந்த வழக்கும் இல்லாத, சமூக தீங்கிழைக்கும் தொழில் செய்யாத, ரவுடி வரலாறு இல்லாதவரை வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்குமா? தியாகிகள் குடும்பத்துக்கு காங்கிரஸ் சீட் தருமா? நாராயணசாமிக்கு எம்எல்ஏ சீட் கிடைக்குமா? இதற்கெல்லாம் பதில் தேடிவிட்டு பாஜக குறித்து பேச வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

x