கோவில்பட்டி: அரசு பேருந்து ஒன்று எட்டயபுரம் அருகே பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர்.
கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளத்துக்கு இன்று பகல் 11.30 மணிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த செல்வக்குமார்(54) ஓட்டினார். விளாத்திகுளம் அருகே குருவார்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன்(43) நடத்துநராக பணியில் இருந்தார்.
பகல் 12.15 மணியளவில் எட்டயபுரத்தை கடந்து கழுகாசலபுரம் விலக்கில் பயணிகளை இறக்கி விட்ட பேருந்து, அதனை தொடர்ந்து மன்னகோபாலநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி ஓடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் போலீஸார் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் செல்வக்குமார், நடத்துநர் கார்த்திகேயன், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த மகேஷ்குமார் மனைவி அழகு குருலட்சுமி(30), தென்காசி மாவட்டம் மலையன்குளத்தைச் சேர்ந்த பாபு மனைவி ஜோதிலட்சுமி(47), குருவிகுளம் அருகே அவனிக்கோனேந்தலைச் சேர்ந்த வேல்சாமி(67), கோவில்பட்டி அருகே கழுகாசலபுரத்தைச் சேர்ந்த வசந்தராஜ் மனைவி சுப்புலட்சுமி(63), கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாரியம்மாள்(44), அவரது மகள் விஜயலட்சுமி(19), விளாத்திகுளம் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த சண்முகராமன்(84), அவரது மனைவி இந்திராணி(68), திருநெல்வேலி பேட்டை காந்திநகரைச் சேர்ந்த முருகன்(68), அவரது மனைவி வள்ளியம்மாள்(60), கழுகுமலை அருகே கரட்டுமலையைச் சேர்ந்த அசோக்(56), தேனி வடுகபட்டியைச் சேர்ந்த காளிதாஸ்(32), விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்த முருகாண்டி(60), விளாத்திகுளம் அருகே கழுகாசலபுரத்தைச் சேர்ந்த சடகோபன்(51) ஆகிய 16 பேர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல், தோள்மாலை பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் முருகன் மனைவி சுப்புலட்சுமி(45), ராமசாமி மனைவி முத்துலட்சுமி(60), கோவில்பட்டி புது கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி(75), விளாத்திகுளம் அருகே முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த சிங்கராஜ்(65), விளாத்திகுளம் கீழ ரத வீதியைச் சேர்ந்த முருகன்(54), விளாத்திகுளம் பிள்ளையார் நத்தம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த அய்யம்பெருமாள்(41), மதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி(31) ஆகிய 7 பேர் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், லேசானை காயமடைந்த 2 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.