கும்பகோணம்: நாம் அதிகாரம், பங்கு என இப்போது கேட்பதை விட நாம் அதிகாரத்துக்கு வந்தால் நாம் மற்றவர்களுக்குப் பங்களிக்கலாம். இதுதான் நம்முடைய கனவாகும் என மயிலாடுதுறை எம்பி பி.சுதா தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமை வகித்தார். மேயர் க.சரவணன், மாநகரத் தலைவர் மிர்சாவூதீன், மாநில பொதுக் குழு உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் வடக்கு காங்கிரஸ் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் என். ராஜேந்திரன், மாநிலத் துணைத் தலைவர் குலாம்மைதீன் ஆகியோர் கட்சி வளர்ச்சிக் குறித்துப் பேசினார்.
மயிலாடுதுறை எம்பி பி.சுதா கூறியதாவது: தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட, பேரூர், ஊராட்சிகளில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தான் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனின் பல ஆண்டுக்கால கனவு.
இந்த கனவிலிருந்து நாம் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை. இதையடுத்து தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடப் போகின்றோம், பாடுபட போகின்றோம். மத்தியில் பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாசிச மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்காக ராகுல் காந்தி போராடிக் கொண்டிருக்கின்றார். அவரது கரத்தை வலுப்படுத்து விதமாக அவருடன் இணைந்து போராடுவோம். நடைபெற உள்ள உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன் அனைத்து கிராமங்களில் நம் காங்கிரஸ் கட்சியை கட்டமைக்க வேண்டும்.
கட்சியின் தலைமை கூறுவதை விதிமீறல்கள் இல்லாமல் சிந்தாமல் சிதறாமல் செய்து முடிக்க வேண்டியது நமது கடமையாகும். மாவட்டத் தலைவர் என்ன கூறுகிறாரோ அதற்கு கட்டுப்பட்டு பணியாற்ற வேண்டும். இதேபோல் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த நண்பர்கள், இண்டியா கூட்டணி பற்றிய கூறும் கருத்துக்களை நாம் தவிர்ப்பது நல்லது. நாம் காங்கிரஸ் கட்சி வளர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாம் அதிகாரம், பங்கு என இப்போது கேட்பதை விட, நாம் அதிகாரத்துக்கு வந்தால், நாம் மற்றவர்களுக்குப் பங்களிக்கலாம். இதுதான் நம்முடைய கனவாகும். இன்றைக்கு வருகிற கட்சி நாளை பதிவு செய்து, நாளை மறுநாள் வரக்கூடிய கட்சி, தமிழகத்தில் ஆள வேண்டும் என நினைக்கும் போது, பல ஆண்டுக் காலம் ஆட்சி செய்த கட்சி, காமராஜர் பெயரைச் சொன்னாலே நம் கட்சி வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் காமராஜர் படம் இல்லாமல் எந்த கட்சியாவது நடத்த முடிகிறதா? எந்த ஒரு கட்சியோ, அமைப்போ தொடங்கினாலும், காமராஜர் படம் இல்லாமல் தொடங்க முடியாது .இவ்வாறு கூறினார். முன்னதாக மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன் வரவேற்றார். முடிவில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி தலைவர் சேகர் நன்றி கூறினார்.